

சென்னை,
இளம் வாக்காளர்களை சேர்க்க அக். 7 முதல் 9 வரை சிறப்பு நடவடிக்கைகள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
இந்தியத் தேர்தல் ஆணையம், 29.09.2026 மற்றும் 01.10.2026 ஆகிய தேதியிட்ட தனது கடிதங்கள் மூலம், சிறப்பு தீவிர திருத்த பணி நிறைவடைந்துள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், இளம் / முதல்முறை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, 2026 அக்டோபர் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சிறப்பு நடவடிக்கைகள் நடத்தப்படும். இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காக, தேவைக்கேற்ப மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள், 10.10.2026 அன்று நடத்தப்படும். முதல்முறை / இளம் வாக்காளர்களின் வாக்காளர் பட்டியல் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், நகர்ப்புற பகுதிகள் மற்றும் பெருநகரங்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படும்.
மேலும், தகுதியுடைய இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு வசதியாகவும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தேர்தல் கல்வியறிவுக் குழுக்களின் சேவைகள் திறம்பட பயன்படுத்தப்படும். சிறப்பு இயக்கம் குறித்து ஊடகங்கள் மூலமாகவும், மாவட்டத் தேர்தல் அலுவலர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் மூலமாகவும் பரவலான விளம்பரம் செய்யப்படும்.
சிறப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து கண்காணிப்பதற்கும், அறிவுறுத்தல்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும், வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் தொடர்ந்து கூட்டங்களை நடத்துவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.