வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2-வது நாளாக இன்றும் சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2-வது நாளாக இன்றும் சிறப்பு முகாம்
Published on

சென்னை,

எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர். அவர்கள் வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18-ந்தேதி கடைசி நாள். தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 1,68,825 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும் (படிவம் 6) அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்து இருந்தார். அதன்படி, இந்த சிறப்பு முகாம் முதற்கட்டமாக டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. அதேபோல, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2-வது நாளாக இன்றும் சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.

மேலும், வருகிற ஜனவரி 3,4 (சனி, ஞாயிறு ) ஆகிய தேதிகளிலும் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com