மின்இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள்: மின்துறை அமைச்சர் அறிவிப்பு

மின்இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மின்கட்டணம் செலுத்த மேலும் 2 நாள் அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின்இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள்: மின்துறை அமைச்சர் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் மின்இணைப்புகள் உள்ளன.

இந்த மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது.

பொதுமக்கள் கோரிக்கை

மின்நுகர்வோர்களின்செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. நேரடியாக மின் கட்டணம் செலுத்த செல்பவர்கள், தங்களின் ஆதார் நகலை காண்பித்து ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். மின்வாரியத்தின் திடீர் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம்

கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற வளர்ச்சி திட்டங்களை விட இரட்டிப்பு வளர்ச்சியை ஏற்படுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அரசு மீது அவதூறு பரப்புகிறார்கள். மின் இணைப்பு உள்ளவர்கள் அதில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.

சில இடங்களில் மின்இணைப்பு பெற்றவர்கள் இறந்து இருக்கலாம். இதற்காக அவகாசம் கொடுக்கப்படும் முதல்-அமைச்சரின் அனுமதியை பெற்று தமிழகம் முழுவதும் விரைவில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதை மின் இணைப்பு பெயர்மாற்றம், ஆதார் எண்ணை இணைக்க பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. கட்டாயம் 100 சதவீதம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் துறையை சீர்திருத்தம் செய்து புதியபரிணாமத்தோடு மேம்படுத்த முடியும்.

மின்கட்டணம் குறைப்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் மின்கட்டணம் உயர்வு குறித்து உத்தேசிக்கப்பட்டபோது மின்கட்டணத்தை குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலனை செய்து ரூ.2,200 கோடி அளவிற்கு உயர்த்த இருந்த கட்டணத்தை குறைத்து உள்ளார். மின் கட்டண உயர்வு தமிழக அரசு எடுத்த முடிவு அல்ல.

மின்கட்டண உயர்வை தாக்கல் செய்யவில்லை என்றால் ஒழுங்கு முறை ஆணையமே மின் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்து உத்தரவுகளை வழங்கும் என்று மத்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்தது. இதனால் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

2 நாட்கள் காலஅவகாசம்

இதற்கிடையே தமிழ்நாடு மின்சார வாரிய வருவாய் பிரிவு தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் கே.மலர்விழி, அனைத்து மாவட்ட கண்காணிப்பு பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களின் ஆதார் எண்ணுடன் மின்சார இணைப்பு எண்ணை இணைத்து, அதை சரிபார்த்த பிறகு இணைய வழியிலும், நேரடியாகவும் மின்சார கட்டணத்தை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. எனவே மின்சார கட்டணம் செலுத்துவதற்கு கடந்த 24-ந் தேதியில் இருந்து வருகிற 30-ந் தேதி வரை இறுதி நாள் உள்ள மின்சார நுகர்வோர்கள் அனைவருக்கும் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும். குறிப்பாக மின்சார கட்டணம் செலுத்த நவம்பர் 28-ந் தேதி இறுதி நாள் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு நவம்பர் 30-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்க வேண்டும். மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு மட்டும் இந்த காலஅவகாசம் பொருந்தும். இந்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இணைக்க கூடுதல் பணியாளர்கள்

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறும்போது, 'மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து, அதை சரிபார்த்த பிறகே இணையவழியிலும், நேரடியாகவும் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆதார் எண்ணை இணைக்கதாவர்கள் மின்கட்டணம் செலுத்த முடியவில்லை என்ற புகார் வருகிறது. எனவே மின்சார கட்டணம் செலுத்தும் அலுவலகங்களில் கூடுதலாக ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டு ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது.

பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின்சார கட்டணம் செலுத்தும் போதே ஆதார் எண்ணை இணைக்க ஆதார் அட்டை நகலை கொடுத்தால் உடனே இணைத்து தருகிறார்கள். எனவே உடனடியாக பொதுமக்கள் தங்களுடைய ஆதார் எண்ணுடன், மின்சார இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும். தற்போது மின்சார வாரிய அலுவலகங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் 2 நாட்கள் காலஅவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரம், அடுக்கு மாடி குடியிருப்புகளில் பொதுபயன்பாட்டு பகுதிகளில் உள்ள மின்சார சாதனங்கள் பயன்பாட்டுக்கு தனியாக மின்சார இணைப்பு பெற்றிருந்தால், அது பொது பயன்பாட்டுக்குள் வரும். மானியம் இல்லாமல் முழுத்தொகை செலுத்தப்படுவதால் அதற்கு ஆதார் எண் இணைக்க தேவையில்லை.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com