

சென்னை,
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு விதிகள் இன்று முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமலுக்கு வந்துள்ளது.
அதே சமயம் சென்னையிலும் பல பகுதிகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காய்ச்சல் முகாம்கள் மீண்டும் துவங்கப்பட்டு, கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விக்டோரியா கல்லூரியின் மாணவர் விடுதி கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றப்பட்டு வரும் நிலையில், அங்கு ஆய்வுகளை மேற்கொண்டபின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளதாக கூறினார். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகையால் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்பட அரசு அறிவித்துள்ள அனைத்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.
சென்னையில் உள்ள விக்டோரியா கல்லூரியின் மாணவர் விடுதியில் 570 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.