

சென்னை,
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாகக்கூறி 100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார், அவரது மேலாளர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில், அன்பில் மகேசை மூன்று நாள்களும், முத்துகுமாரை ஐந்து நாள்களும், சரவணனை ஒரு நாளும் காவலில் எடுத்து மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். இந்தநிலையில், இவர்கள் மூவரையும் சேர்த்து, 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப் பிரிவு போலீசார் தரப்பில் சென்னை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், பணம் வசூலித்தது யார்? தனியார் பள்ளிகளிடமிருந்து எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது? வசூலிக்கப்பட்ட பணம் யாரை சென்றடைந்தது? என்பது குறித்து மூவரிடமும் விசாரிக்க வேண்டியுள்ளதால், அவர்களை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, அன்பில் மகேஷ் உள்ளிட்ட மூவரையும் இன்று காலை 11 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.