பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு தீபாராதனை

குருபெயர்ச்சி விழாவையொட்டி திருப்பத்தூர் அருகே உள்ள பட்ட மங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு தீபாராதனை
Published on

திருப்பத்தூர்

குருபெயர்ச்சி விழாவையொட்டி திருப்பத்தூர் அருகே உள்ள பட்ட மங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

குருபெயர்ச்சி விழா

ஆண்டுதோறும் குருபகவான் ஒரு குறிப்பிட்ட ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது உண்டு. அந்த தினம் குருபெயர்ச்சி என அழைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர், தெட்சணாமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில் குருபகவான் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிப்பது மற்றொரு சிறப்பாகும். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டிற்கான இந்த விழா கடந்த 16-ந்தேதி சிறப்பு யாகத்துடன் தொடங்கியது. இந்தாண்டு நேற்று இரவு 11.29 மணிக்கு குரு பகவான் மீனராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ந்தார். முன்னதாக நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெள்ளி அங்கி அணிந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் தெட்சணாமூர்த்தி அருள்பாலித்தார்.

சிறப்பு தீபாராதனை

மூலவர் எதிரே தல விருட்சமான ஆலமரத்தடியில் முனிவர்கள் தனந்தகுமாரர், தனநந்தர், தனாதனர், சனகர் ஆகியோருக்கு கார்த்திகை பெண்கள் முன்னிலையில் மந்திரம் உபதேசிக்கும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து கால சந்தி, உச்சி காலம், சாயரட்சை பூஜை ஆகியவை நடைபெற்றது.

இரவு 11.29 மணிக்கு குரு பெயர்ச்சியானதும் ராஜகோபுரம், மூலவர் கோபுரம் ஆகிய கோபுரங்களுக்கு ஏழு முக தீபாராதனை நிகழ்ச்சியும், மூலவர் தெட்சணாமூர்த்திக்கு நட்சத்திர தீபாராதனையும் நடைபெற்றது. விழாவையொட்டி சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

மேலும் பக்தர்களுக்கு வேண்டிய குடிதண்ணீர், உணவு உள்ளிட்ட வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வீரப்ப செட்டியார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com