பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு 24-ந் தேதி சிறப்பு கிராமசபை கூட்டம்

பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 24-ந் தேதி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.
பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு 24-ந் தேதி சிறப்பு கிராமசபை கூட்டம்
Published on

சென்னை,

குடியரசு தினம், தொழிலாளர்கள் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் தமிழகத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

இந்தக் கூட்டத்தில்அந்தந்த கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

கொரோனா பாதிப்பு

மேலும் இந்த கூட்டத்தில் கிராம மக்களிடமிருந்தும் ஊரக வளர்ச்சி குறித்து குறை, நிறைகள் கேட்டறியப்படும். பொது மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிப்பார்கள். இது போன்ற கிராமசபைக் கூட்டங்களின் வாயிலாகவே தமிழக அரசும், ஊரக வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் கிராமசபை கூட்டங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு சுதந்திர தின விழா, காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. மதுரையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அதேநேரத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில், குடியரசு தினத்தில் நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.

24-ந்தேதி சிறப்புகூட்டம்

தற்போது உள்ளாட்சி தேர்தல்கள் முடிந்து பெரும்பாலான இடங்களில் பஞ்சாயத்து தலைவர்கள் பதவியேற்று உள்ளனர். இந்த சூழ்நிலையில், 12, 524 பஞ்சாயத்துக்களிலும் வரும் 24-ந்தேதி கிராமசபை கூட்டம் நடக்க இருக்கிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் பிரவீன் பி.நாயர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பஞ்சாயத்துராஜ் தினம்

தேசிய அளவில் பஞ்சாயத்துராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 24-ந் தேதி கிராமங்கள் நீடித்த வளர்ச்சி குறித்து சிறப்பு கிராம சபை கூட்டஙகள் நடத்துமாறு மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கவும், உறுதி மொழி எடுத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டதற்கான விவரங்களை மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கிராமசபை கூட்டம் நடத்துவது தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டத்தினை 24-ந் தேதி நல்ல முறையில் நடைபெற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கூட்டம் நடைபெற்றமைக்கான அறிக்கையினை தொடர்புடைய கிராம ஊராட்சிகளிடமிருந்து பெற்று இவ்வியக்கத்திற்கு 30-ந் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com