ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் - செல்வப்பெருந்தகை

தொடர்ச்சியாக நிகழும் சாதிய ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டம், அடியாமங்கலம், பெரிய தெருவைச் சேர்ந்த, வாலிபர் சங்கத்தின் வட்டாரத் துணை தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினருமான வைரமுத்துவும் அதேபகுதியில் வசித்து வரும் மாலினி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பெண்ணின் தாயார் மாற்று சாதியைச் சேர்ந்தவர். இதனால், தனது சாதியில் உள்ள அவருக்கு வேறு ஒருவருடன் மாலினிக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இத்திருமணத்திற்கு இடையூராக வைரமுத்து இருக்கிறார் என்ற ஒரே காரணத்தால் நேற்று அவரை அரிவாளால் தாக்கி கொடூரமாக படுகொலை செய்துள்ளனர் பெண்ணின் வீட்டார்.

ஏற்கனவே, இக்காதல் விவகாரம் காவல்துறை வரைக்கும் சென்ற நிலையில் இப்படுபாதகச் செயலை செய்துள்ளனர். இச்சம்பவம் சமூக நீதிக்கும் மனித உரிமைக்கும் நேரடியான சவாலாகும். இதுவும் சாதிய ஆணவ படுகொலைதான். இச்செயலை செய்தவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன். படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிந்து கடுமையான தண்டனை பெற்றுத்தர காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய சாதிய ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com