மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு மெட்ரோ ரெயில்: 250 பேர் உற்சாகப் பயணம்!

'மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினத்தை' முன்னிட்டு இந்த விழிப்புணர்வு மற்றும் அனுபவப் பயணம் நடத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு மெட்ரோ ரெயில்: 250 பேர் உற்சாகப் பயணம்!
Published on: 

சென்னை,

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அரசு சிறப்புப் பள்ளியை சேர்ந்த 250 மாணவர்களுக்கு சிறப்பு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்துடன் இணைந்து, அரசு சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கான மெட்ரோ ரெயில் பயணத்தை இன்று (27.11.2026) ஏற்பாடு செய்திருந்தது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி உலகளவில் கடைப்பிடிக்கப்படும் 'மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினத்தை' முன்னிட்டு இந்த விழிப்புணர்வு மற்றும் அனுபவப் பயணம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அரசு சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 250 மாற்றுத்திறனாளி குழந்தைகள், அவர்களது ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுடன் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர். இவர்களுக்காக விமான நிலைய மெட்ரோ நிலையத்திலிருந்து ஏ.ஜி.-டி.எம்.எஸ். மெட்ரோ நிலையம் வரை சிறப்பு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது.

விழிப்புணர்வுப் பயணம்

காஞ்சிபுரம், விருதுநகர் மற்றும் தாம்பரம் அரசு காது கேளாதோர் சிறப்புப் பள்ளிகள், பூந்தமல்லி - அரசு பார்வையற்றோர் சிறப்புப் பள்ளி, தாம்பரம் - அரசு அறிவாற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பார்வைக் குறைபாடு, காது கேளாமை மற்றும் உடல் இயக்கம் சார்ந்த குறைபாடுடைய சிறப்புப் பள்ளி மாணவர்கள் மெட்ரோ ரெயில் அமைப்பை நேரடியாக அறிந்து கொள்ளவும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் அனுபவத்தைப் பெறவும், சுயசார்புடன் சுதந்திரமாகப் பயணிக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்த விழிப்புணர்வுப் பயணம் ஒருங்கிணைக்கப்பட்டது.

கடமைப்பட்டுள்ளது

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பான, சிறப்பான மற்றும் எளிதில் அணுகக்கூடிய அமைப்பாகச் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய சேவை மற்றும் பயணிகள் அனுபவத்தை மேம்படுத்த சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எப்போதும் கடமைப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மு. லட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல இணை இயக்குநர் சி. ஜெயச்சந்திரன், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

X