சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை - 2,159 பேர் கைது

தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்வதற்கான தீவிரமுயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மகேஷ்குமார் அகர்வால்
Published on

சென்னை,

சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்புகாவல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் (History Sheet Rowdies), சரித்திரப்பதிவேடு அல்லாத குற்றவாளிகள்(Non-History Sheet Offenders). குற்றகுணத்தார் (Bad Characters), மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக தீவிர அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கண்காணிப்பு மற்றும் சோதனை

கடந்த 12.08.2026 முதல் 01.09.2026 வரை. சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் மீது மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கைகளின் போது 88,570 சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் சோதனை செய்யப்பட்டனர். அவர்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2,159 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டனர்.

வெளிவர முடியாத பிடியாணைகள்

பிணையில் வெளிவரமுடியாத பிடியாணைகள் நிறைவேற்றும் சிறப்பு நடவடிக்கையில் 12.08.2026 முதல் 01.09.2026 வரை மொத்தம் 4,706 பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவரமுடியாத பிடியாணைகள் (NBW) நிறைவேற்றுதல் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்வதற்கான தீவிரமுயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநிலம் முழுவதும் உள்ள மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோருக்கு. சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், குற்றகுணத்தார், தொடர் குற்றவாளிகள், மற்றும் சமூகவிரோதிகள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளவும். வழக்கமான சோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிரமான கண்காணிப்புகள் மூலம் குற்றச்செயல்களைத் தடுக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்ட அமலாக்க நடவடிக்கை

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகள் கண்காணிப்பு பணிக்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்தியுள்ளதுடன், தடுப்பு காவல் நடவடிக்கைகளை வலுப்படுத்தி. பிடியாணைகள் நிறைவேற்றுதலை அதிகரித்து. தொடர் குற்றவாளிகள் மற்றும் சட்டம் - ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களுக்கு எதிராக இலக்குவைத்து நடவடிக்கை எடுக்க உதவியுள்ளன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் பொது ஒழுங்கை உயர்தரத்தில் பராமரிப்பதற்கும், பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்றுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com