

சென்னை,
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் போலியோ வைரஸ் பரவி வருகிறது. இதனால் இந்திய போலியோ நிபுணர் ஆலோசனைக்குழு நாடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டு 21 மாநிலங்களில் 272 மாவட்டங்களை போலியோ பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள பகுதிகளாக அடையாளம் கண்டுள்ளன.
அந்த பட்டியலில் தமிழகத்தின் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த 6 மாவட்டங்களிலும் இன்று போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த மாவட்டங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. இந்த மாவட்டங்களில் மொத்தம் 6 ஆயிரத்து 647 போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 வயதிற்கு உள்பட சுமார் 9 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.