சேலம்,
ஆடித்திருவிழா
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்று அழைப்பதுண்டு. ஆடி பிறப்பு, ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு உள்ளிட்ட நாட்களில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சேலம் மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் தற்போது ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்து வருகிறது.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடிப்பூர விழாவையொட்டி அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். மேலும் கோவிலில் உள்ள கம்பத்துக்கு பெண்கள் வேண்டுதலாக மஞ்சள் கயிறு, வளையல்களை கட்டினார்கள்.
அம்மன் கோவில்கள்
இதேபோல் குகை மாரியம்மன், காளியம்மன் கோவில், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில், அம்மாபேட்டை காளியம்மன் கோவில், அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில், குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களிலும் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவிலில் காளியம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெருமாள் கோவில்கள்
இதனிடையே ஆண்டாள் ஜெயந்திநாளான ஆடிப்பூரத்தையொட்டி பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் காலை 6 மணிக்கு ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. தொடர்ந்து நடந்த ஆண்டாள் திருவீதி உலாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாளை தரிசனம் செய்தனர்..
இதேபோல், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களிலும் ஆடிப்பூர விழாவையொட்டி நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.
மேலும் சேலம் அம்மாபேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள், பெருமாள் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.