கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
Published on

கலியுக வரதராஜ பெருமாள்

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, தங்கள் நிலங்களில் விளைந்த நெல், கம்பு, சோளம், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட தானியங்களை நேர்த்திக்கடனாக சாமிக்கு செலுத்துவார்கள். அதன்படி நேற்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

கலியுக வரதராஜ பெருமாளுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

நேர்த்திக்கடன்

பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்தி பெருமாளை பயபக்தியுடன் வணங்கினர். இந்த கோவிலுக்கு அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களும் தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரியலூரில் இருந்து இயக்கப்பட்ட பஸ்கள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களிலும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

திருமஞ்சனம்

தா.பழூர் அருகே உள்ள கோடாலி கருப்பூர் ராமநாராயண பெருமாள் கோவிலில் சீதா பிராட்டி, லட்சுமணர் சமேத ராமநாராயண பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமநாராயண பெருமாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தாதம்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வரதராஜ பெருமாளுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது.

தா.பழூர் பால ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஆஞ்சநேயருக்கு பழ அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா திருக்காட்சி நடைபெற்றது. பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com