51 அடி உயரத்தில் நடராஜர் சிலை அமைக்க சிறப்பு பூஜை

ராமேசுவரம் கடற்கரையில் 90 டன் எடையில் 51 அடி உயரத்தில் நடராஜரின் முழு உருவ சிலை அமைப்பதற்கான விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
51 அடி உயரத்தில் நடராஜர் சிலை அமைக்க சிறப்பு பூஜை
Published on

ராமேசுவரம், 

ராமேசுவரம் கடற்கரையில் 90 டன் எடையில் 51 அடி உயரத்தில் நடராஜரின் முழு உருவ சிலை அமைப்பதற்கான விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

நடராஜர் சிலை

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற புனித யாத்திரை தலமாகும். இந்தநிலையில் ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் உலக சிவ ஆன்மிக அடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் 51 அடி உயரத்தில் நடராஜரின் ஐம்பொன் உருவ சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி அறக்கட்டளை பொறுப்பாளர் ஸ்ரீமத் சிவசேதுராம முருகவேல் சுவாமிகள் தலைமையில் நேற்று முன்தினம் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு பரதநாட்டிய குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது.

திருக்கழுக்குன்றத்தில் இருந்து வந்திருந்த திருவாசக சித்தர் தாமோதரன் சுவாமிகள் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில உள்துறை மந்திரி நமச்சிவாயம், பா.ஜ.க. மாவட்ட பார்வையாளர் முரளிதரன், நகர் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர் பொருளாளர் சுரேஷ், முன்னாள் ராணுவ பிரிவு தலைவர் பூபதி மற்றும் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலமாக சென்ற சிவனடியார்கள்

விழாவில் சிவனடியார்கள் நடராஜரின் புகழ் குறித்து ஆன்மிக பாடல்களை பாடியபடி ஊர்வலமாக புறப்பட்டனர். சன்னதி தெரு, அக்னிதீர்த்த கடற்கரை, சங்குமால் கடற்கரை சாலை வழியாக ஓலைக்குடா கடற்கரையில் நடராஜர் சிலை அமைய உள்ள விழா பகுதிக்கு வந்தனர். சிவனடியார்களை ஸ்ரீமத் சிவசேதுராம முருகவேல் சுவாமிகள் வரவேற்றார்.இதுகுறித்து உலக சிவ ஆன்மிக அடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை பொறுப்பாளர் ஸ்ரீமத் சிவசேதுராம முருகவேல் சுவாமிகள் கூறியதாவது, ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் சுமார் 90 டன் எடையில் 51 அடி உயரத்தில் ஐம்பொன் நடராஜர் உருவச்சிலை அமைக்கப்பட உள்ளது. அதற்கான விழாவானது சிறப்பு பூஜைகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள சிவனடியார்கள், ஆன்மிக பெரியோர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் ராமேசுவரத்தில் இந்த நடராஜரின் சிலை அமைக்கப்பட உள்ளது. சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நடராஜரின் உருவசிலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளானது ஒரு ஆண்டுக்குள் முடியும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com