தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஈஸ்டர் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
Published on

ஊட்டி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

ஈஸ்டர் பண்டிகை

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு திருப்பலியுடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை தொடங்கியது.

அப்போது பிறருடன் அன்பு பாராட்டுதல், விட்டுக்கொடுத்து வாழ்தல், மன்னித்து வாழ்தல், சகோதரத்துவம் பேணுதல் உள்பட பல்வேறு கூற்றுகளை தேவாலய குருக்கள் போதித்தனர். நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் ஊட்டியில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

நற்கருணை ஆசீர்

சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலயத்தில் நேற்று அதிகாலை 5 மணி, காலை 8.30 மணியளவில் பங்குத்தந்தை இம்மானுவேல் வேழவேந்தன் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் மக்களின் பாடுகளை ஏற்றுக்கொண்டு மரித்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து குறித்து நற்செய்தி கூறப்பட்டது. முடிவில் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது.

செயின்ட் மேரிஸ் ஆலயத்தில் புனித பவுல் ஆலய பங்கு குரு ஆன்டனி டிக் ரோஸ் முன்னிலையில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு ஆலய முற்றத்தில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு புதிய நெருப்பு, புதிய பாஸ்கா தேன் மெழுகு திரி புனிதப்படுத்தப்பட்டு ஏற்றப்பட்டது.

பிரார்த்தனை

பின்னர் குரு கேண்டிலை ஆலயத்தினுள் எடுத்து சென்று மெழுகு திரியை ஏற்றி புதிய ஒளியை அர்ப்பணித்தார். தண்ணீரை புனிதப்படுத்தி தீர்த்தமாக அனைவரின் மேல் தெளித்தார். இதில் பங்கு குரு செல்வநாதன், உதவி பங்கு குரு அபிஷேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று ஊட்டி புனித மரியன்னை ஆலயம், புனித வெஸ்லி ஆலயம், புனித ஸ்டீபன் ஆலயம், புனித திரேசன்னை ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com