ஆம்பூர் அருகே +2 மாணவனை விடுவிக்க ரூ.10,000 லஞ்சம்: காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

விசாரணைக்குப் பின், அந்த மாணவனை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.10,000 லஞ்சம் தர வேண்டும் என மதியழகன் கட்டாயப்படுத்தியுள்ளார்.
ஆம்பூர் அருகே +2 மாணவனை விடுவிக்க ரூ.10,000 லஞ்சம்.
காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன்.
Published on: 

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளி மாணவனை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10,000 லஞ்சம் கேட்ட உமராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இடத் தகராறு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராமாபுரம் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் 5-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வரும் பொதுவழி தொடர்பாக அங்கு வசிக்கும் மார்க்கபந்து மற்றும் மணிமேகலை ஆகியோரது குடும்பத்தினரிடையே இடத் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முதலில் வாக்குவாதமாகத் தொடங்கி, பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பாக மாறியுள்ளது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து இரு தரப்பினரும் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்த சென்றுள்ளார். அப்போது வீட்டில் சம்பந்தப்பட்ட பெண் மணிமேகலை இல்லாததால், அவரது மகனான +2 படிக்கும் பள்ளி மாணவனை மதியழகன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.

லஞ்சப் புகார் -நடவடிக்கை

விசாரணைக்குப் பின், அந்த மாணவனை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.10,000 லஞ்சம் தர வேண்டும் என மதியழகன் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர், இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அக்‌ஷய் அணில் வாக்ரேவிடம் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் லஞ்சம் கேட்டது உறுதியானதை அடுத்து, நேற்று (திங்கட்கிழமை) சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகனை முதலில் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்கு பின், அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com