“தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு சிறப்பு கட்டணச் சீட்டுகள்” - அமைச்சர் சேகர் பாபு தகவல்

தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டண சீட்டுகள் வழங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
“தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு சிறப்பு கட்டணச் சீட்டுகள்” - அமைச்சர் சேகர் பாபு தகவல்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதனையடுத்து துறை சார்ந்த 165 அறிவிப்புகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது;-

திருக்கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும்விதமாக சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான அர்ச்சனை கட்டணத்தில் அர்ச்சகருக்கு 60 சதவீதம் பங்குத் தொகையாக வழங்கப்படும்.

நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

10 திருக்கோயில்களில் அன்னதான திட்டம் புதியதாக தொடங்கப்படும். மேலும் திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் தற்போது வழங்கப்பட்டு வரும் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்தி முக்கியத் திருவிழா நாட்களில் நாள் ஒன்றுக்கு 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். 14 திருக்கோயில்களில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அன்னதான கூடங்கள் கட்டப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் ரூ10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மேலும், இத்திருக்கோயில் திருப்பணிக்கான பணிகள் துவங்கப்படும்.

மாதந்தோறும் பவுர்ணமி தினங்களில் 12 பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களில் 108 திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படும். இதற்கான செலவில் நான்கில் ஒரு பங்கு மட்டும் பக்தர்களிடம் கட்டணமாக பெறப்படும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொன்மையான 80 திருக்கோயில்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அரசு நிதி மூலம் புனரமைப்பு செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com