

சென்னை,
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் - போடிநாயக்கனூர் இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தாம்பரத்தில் இருந்து வரும் 23, 30, ஜூன் 6, 13 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06059) மறுநாள் காலை 11.15 மணிக்கு போடிநாயக்கனூரை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், போடிநாயக்கனூரில் இருந்து வரும் 24, 31, ஜூன் 7, 14 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06060) மறுநாள் காலை 6.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.
இந்த சிறப்பு ரெயில், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), சிதம்பரம், மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.