

திருச்சி,
பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக திருச்சி வழியாக திருவனந்தபுரம் வடக்கு- தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் வருகிற 20 மற்றும் 21-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது.
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம் வடக்கு- தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்- 06164) திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி இரவு 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரெயில் திருச்சிக்கு 21-ந்தேதி அதிகாலை 4.40 மணிக்கு வந்து 4.50 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
மறு மார்க்கத்தில் தாம்பரம்- திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண் -06163) வருகிற 21-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரெயிலானது திருச்சிக்கு 21-ந் தேதி இரவு 7.35 மணிக்கு வந்து 7.45 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில்களில் 16 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டிகள், 2 தூங்கும் வசதி பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு பெட்டி இணைக்கப்பட்டு இருக்கும்.