

சென்னை,
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருநெல்வேலியில் இருந்து ஜூலை 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமை இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06070) மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமை மதியம் 1.25 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06069) அன்று நள்ளிரவு 1 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.