

கரூர்,
பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் வசதிக்காக கரூர் வழியாக மைசூரு- ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி மைசூரு- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06263) நேற்று முன்தினம் முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி வரை திங்கட்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது. அதன்படி இந்த ரெயிலானது திங்கட்கிழமை மாலை 6.35 மணிக்கு மைசூரு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வரும். இந்த ரெயில் அடுத்த நாள் (செவ்வாய்க்கிழமை) காலை 5.18 மணிக்கு கரூர் ரெயில் நிலையத்தை வந்தடையும். பின்னர் காலை 5.20 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும்.
இதேபோல மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம்- மைசூரு வாராந்திர சிறப்பு ரெயிலானது (வண்டி எண்: 06264) வருகிற டிசம்பர் மாதம் 1-ந்தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது. அதன்படி இந்த ரெயிலானது செவ்வாய்க்கிழமை மதியம் 3.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு வரும். இந்த ரெயில் இரவு 8.08 மணிக்கு கரூர் ரெயில் நிலையத்தை வந்த டையும். பின்னர் இரவு 8.10 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு கண்டோன்மெண்ட் வழியாக அடுத்தநாள் (புதன்கிழமை) காலை 7.45 மணிக்கு மைசூரு ரெயில் நிலையத்தை சென்றடையும் என தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.