

சென்னை,
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்க தெற்கு ரெயில்வே அவ்வப்போது சிறப்பு ரெயில்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது திருச்சியில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது . இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
திருச்சியில் இருந்து பெங்களூரு செல்லும் கோடைக்கால சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06007) வருகிற ஏப்ரல் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) இயக்கப்படும். அதிகாலை 5.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், பெங்களூரில் இருந்து திருச்சி செல்லும் கோடைக்கால சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06008) வருகிற ஏப்ரல் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) இயக்கப்படும். பிற்பகல் 3 மணிக்கு பெங்களூருவில் புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு திருச்சி வந்து சேரும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.