

கோவை,
ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் முக்கிய வழித்தடங்களில் ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி கோவை-ஜெய்ப்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் எண் (06181) நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற நவம்பர் 6-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் கோவையில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக காலை 5.10 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5.15 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சனிக்கிழமை மதியம் 1.25 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் ஜெய்ப்பூர்-கோவை வாராந்திர சிறப்பு ரெயில் எண் (06182) வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 9-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் ஜெய்ப்பூரில் இருந்து இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக புதன்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5.53 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக காலை 8.30 மணிக்கு கோவை சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.