சமூக நீதி விடுதி மாணவர்களின் திறனை மேம்படுத்த சிறப்பு பயிற்சி திட்டம்!

12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சமூக நீதி விடுதி மாணவர்களின் திறனை மேம்படுத்த சிறப்பு பயிற்சி திட்டம்!
Published on

சென்னை,

சமூக நீதி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகளில் சிறப்பு பயிற்சி வழங்குவதற்காக தகுதியுடைய முன்னணி பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கை வரவேற்கப்படுகிறது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சிறப்பு பயிற்சி

தமிழ்நாடு அரசு சமூக நீதித் துறையின், சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்காக, தகுதியுடைய முன்னணி பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கை (Expression of Interest - EoI) வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள 120-க்கும் மேற்பட்ட சமூக நீதி விடுதிகளில் தங்கி பல்வேறு கல்லூரிகளில் பயிலும் 12,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை RRB, SSC, TNPSC, IBPS உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சித் திட்டத்தின் கீழ் நேரடி வகுப்புகள், ஐயம் தீர்க்கும் அமர்வுகள், தொடர் தேர்வுகள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

வழிகாட்டுதல்கள்

மேலும், மாணவர்கள் தங்கள் திறன்களின் அடிப்படையில், தங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் உள்ள பல்வேறு தேர்வுகள் குறித்த விவரங்கள் பெறும் விதமாகவும், பொதுவான தேர்வுத் தயாரிப்புக்கான வழிகாட்டுதல்களும் பெறும் விதமாகவும் இத்திட்டம் அமையும். அத்துடன், பல தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மற்றும் தேர்வு தொடர்பான கால அட்டவணை குறித்த தகவல்களும் அவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த விருப்பக் கோரிக்கையானது (EoI), சந்தை நிலவரத்தை மதிப்பிடுவதற்கும் திட்ட மதிப்பீட்டிற்குமான செலவினக் கணக்கீட்டை (Price Discovery) மேற்கொள்வதற்கும் மட்டுமே கோரப்படுகிறது. இதில் பங்கேற்கும் நிறுவனங்கள், தங்களது நிதி முன்மொழிவில் உரிய முறையில் சுட்டிக்காட்ட வேண்டும்.

இதில் பங்கேற்க விருப்பமுள்ள நிறுவனங்கள், நிறுவனத் தகுதி விவரங்கள் மற்றும் உரிய நிதி முன்மொழிவுப் படிவத்தை adw.director@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 05.10.2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு https://www.tnadw.tn.gov.in/ என்ற இணையதளத்தை அணுகவும். பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: தியாகராஜன் துணை இயக்குநர் (திட்டம்) (7338801377) / பெ.ச.கண்ணன் உதவி இயக்குநர் (விடுதி) (7338801403).

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com