பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி நெல்லையில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையான நேற்று ஏராளமான பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நெல்லை அருகே உள்ள மேல திருவேங்கடநாதபுரத்தில் தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று அதிகாலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. காலை 10 மணிக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

இதேபோல் நெல்லை சன்னியாசி கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலில் காலையில் சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடந்தது. நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில், பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில், குறிச்சி அக்ரஹாரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

நெல்லை டவுன் மேல மாடவீதியில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் காலை 8.30 மணிக்கு திருமஞ்சனம், 10.30 மணிக்கு திருவாராதனம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு துளசி, துளசி தீர்த்தம், மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் கருட சேவை நடந்தது.

நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி அதிகாலை 4-30 மணிக்கு எட்டெழுத்து பெருமாளுக்கும் பெரியபிராட்டி, இளையபெருமாள் ஆத்தியப்பர் மாயாண்டிசித்தர் ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் சிறப்பு பூஜையும் நடந்தது. இரவில் கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஜடாயு தீர்த்தம் லட்சுமி நாராயணர் கோவிலிலும், காட்டுராமர் கோவிலிலும் சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com