ஆடிப்பூரம் விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு: மயிலாப்பூர் தெப்பக்குளக்கரையில் கற்பகம்பாளுக்கு தீர்த்தவாரி

மயிலாப்பூர் தெப்பக்குளக்கரையில் கற்பகம்பாளுக்கு தீர்த்தவாரியும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. அம்மனுக்கு சாத்தப்படும் வளையல்கள் பெண்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்பட்டது.
ஆடிப்பூரம் விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு: மயிலாப்பூர் தெப்பக்குளக்கரையில் கற்பகம்பாளுக்கு தீர்த்தவாரி
Published on

ஆடிமாதத்தில் வரக்கூடிய பல்வேறு விசேஷங்களில் முக்கியமான திருவிழா ஆடிப்பூரம். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நன்னாளில் உமாதேவி அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. திருமணமாகாத பெண்கள் இந்த நாளில் அம்பாளையும், ஆண்டாளையும் வழிபட்டால், அவர்களுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமண யோகம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது. அந்தவகையில் நேற்று சைவ கோவில்களில் அம்பாளுக்கும், வைணவ கோவில்களில் ஆண்டாளுக்கும் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெறுகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவிலில், தெப்பக்குளக்கரையில் கற்பகம்பாளுக்கு தீர்த்தவாரியும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. மாட வீதிகளில் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை அம்பாளுக்கு சந்தனக் காப்பு அலங்காரமும், இரவு வளையல் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. பிற அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சாத்தப்படும் வளையல்கள் பெண்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்பட்டது.

அதேபோல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு அபிஷேகமும், மாலையில் ஆண்டாளுடன், சாமி மாட வீதிகளில் வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. இதேபோன்று புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி சீனிவாச பெருமாள் மற்றும் தாயார், ஆண்டாளுக்கு மலர் அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com