

ஆடிப்பூர விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடிப்பூர விழா
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடிப்பூர விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, வளையல் அலங்கார சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு வளையல் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் இரவு கோவில் வளாகத்தில் கும்ப பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வளையல் அலங்காரம்
தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்கார சேவை நடைபெற்றது. விழாவையொட்டி சீர்தட்டு வரிசை அழைப்பு நிகழ்ச்சியும், வளைகாப்பு விழாவும் நடந்தன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் தர்மபுரி தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள பிரகதாம்பாள் உடனாகிய அருளீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதே போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடிப்பூர விழா வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.