கோவில் நிதியை பக்தர்களின் மேம்பாட்டிற்காக செலவிடுவது குற்றமாகாது - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

கோவிலின் நிதியை அப்படியே வைத்திருப்பதால் என்ன பலன் கிடைக்க போகிறது என்றும், அதனை கொண்டு பக்தர்களின் மேம்பாட்டிற்காக செலவிடுவது குற்றமாகாது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கோவில் நிதியை பக்தர்களின் மேம்பாட்டிற்காக செலவிடுவது குற்றமாகாது - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
Published on

கோயம்பேடு, குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் ரூ.53.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய மரத்தேர் உருவாக்கும் பணி, ரூ.85.40 லட்சம் மதிப்பீட்டிலான ஐந்து நிலை ராஜகோபுரம், ரூ.49 லட்சம் மதிப்பீட்டிலான அன்னதானக் கூடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் நிதியின் மூலம் ரூ.29 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் புதிய கலாசார மையம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. இது முழுமையாக பக்தர்களின் பயன்பாட்டிற்காக கோவிலின் அறங்காவலர்களின் ஒப்புதலுடன் நமது கலை, கலாசாரம், பண்பாட்டை காக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

கோவிலின் நிதியை அப்படியே வைத்திருப்பதால் என்ன பலன் கிடைக்க போகின்றது. அதனை கொண்டு பக்தர்களின் மேம்பாட்டிற்காக செலவிடுவது குற்றமாகாது. ஆகவே சட்டத்திற்கு உட்பட்டு, அறங்காவலர் குழுவின் ஒப்புதலோடு அந்த நிதியை கலாசார மையத்திற்கு பயன்படுத்த இருக்கிறார்கள். இன்னும் 5 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவிற்கு கும்பாபிஷேகங்கள் நடத்தப்படும்.

திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் கோவில்கள் அத்தனையும் புனரமைக்கின்ற பணிகளில் முழு வீச்சோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். 5 ஆண்டுகள் நிறைவுறுகின்ற போது அனைவரும் புருவத்தை உயர்த்தி, வசை பாடுபவர்களும் வாழ்த்துகின்ற ஒரு நல்ல சூழ்நிலை உருவாகும்.

பொன்மாணிக்கவேல் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் பல அப்பாவிகள் சிறை சென்றார்கள். விளம்பரத்திற்காக பொன் மாணிக்கவேல் தவறான குற்றச்சாட்டுகளை துறையின் மீது அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார். தற்போது பணியில் இல்லாத காலத்திலும் அவர் மீது சி.பி.ஐ. முதற்கொண்டு நீதிமன்ற வழக்குகள் நிறைய இருக்கின்றன.

அவர் குற்றம் அல்லது தவறுகளை குறிப்பிட்டு சொன்னால் நிச்சயமாக அதற்கு விளக்கம் தரவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கின்றது.

கவர்னரை பொறுத்தளவில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட முடியுமோ அப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அவற்றை எல்லாம் முறியடித்து தமிழகத்தினை வளர்ச்சி பாதைக்கு முதல்-அமைச்சர் அழைத்து சென்று கொண்டிருக்கிறார். அவர் தமிழகத்தினுடைய கவர்னராக செயல்படவில்லை ஆர்.எஸ்.எஸ்.- ன் தமிழ்நாடு மாநில தலைவராகவும், பா.ஜ.க.மாநில தலைவராகவும் செயல்படுகிறார்.

மனிதனை பிரித்தாள்வது, சாதி, மத துவேஷங்களை இடுவது போன்றவற்றை தான் கவர்னர் தன்னுடைய பணியாக மேற்கொண்டு இருக்கின்றார். கவர்னருக்கு உண்டான பணிகளிலிருந்து அவர் தவறி விட்டு இது போன்ற காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com