

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நடத்தப்படும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற்று, அதில் வெற்றி பெற்று முதல் இடங்களை பிடித்த வீரர்-வீராங்கனைகள் சென்னையில் நடக்க உள்ள மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்கள் நேற்று மாநில போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு புறப்பட்டனர். பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்துகொண்டு அவர்களை வழியனுப்பி வைத்தார்.
முன்னதாக அவர் பேசும்போது, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கி வருகிற 25.7.2023 வரை சென்னையில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் நெல்லை மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்ள உள்ள வீரர்களுக்கு போக்குவரத்து வசதி, சென்னையில் தங்குமிட வசதி, உணவு மற்றும் சீருடைகள் ஆகியவை மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் எற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வீரர்கள் சிறப்பாக விளையாடி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.
மாநில போட்டியில் தனிநபர் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-வது பரிசாக ரூ.75 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது. குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.37 ஆயிரத்து 500-ம் 3-வது பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.