

சென்னை,
ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாடு பதக்கங்களை பெரும் வகையில் தேவையான செயல்திட்டங்கள் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளபடும். இளைஞர்கள் போதை பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல் ஆரோக்கியமான உடல் நலம் மற்றும் மன நலத்தோடு சிறந்த சமுதாயத்தை உருவாக்கப்படும்
பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவர்கள் இன்று (18.05.2026) நேரு உள் விளையாட்டரங்கில் உட்கட்டமைப்புகள், விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டு வீரர்களுடைய உணவுமுறை, பயிற்சிகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் தேவைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வு பின் பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது.
தமிழ்நாடு முதல்-அமைச்சருடைய வழிகாட்டுதலின்படி விளையாட்டுத்துறையின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் நேரு உள் விளையாட்டரங்கில் உட்கட்டமைப்புகள், விளையாட்டு விடுதி மற்றும் விடுதியில் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களின் உணவுமுறை அவர்களுடைய பயிற்சிகள், அவர்களின் தேவைகள் குறித்து கலந்துரையாடி கேட்டறியப்பட்டது.
குறிப்பாக ஒரு விளையாட்டு விடுதி மாணவனாக அதிலும் இதே நேரு விளையாட்டரங்கில் அமைந்துள்ள விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் விடுதியில் 22 ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதாரண கூடைப்பந்து வீரராக தொடங்கப்பட்ட வாழ்க்கையை இந்த தருணத்தில் இங்குள்ள அனைவரிடமும் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
குறிப்பாக கல்வித் துறைக்கு எந்தளவுக்கு முக்கியதுவம் அளிக்கப்படுகிறதோ அதற்கு இணையான முக்கியத்துவத்தினை விளையாட்டுத்துறைக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் அவர்களின் பார்வையாகும். குறிப்பாக பள்ளி பயிலும் காலங்கள் முதலே இளைஞர்கள் போதை பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல் ஆரோக்கியமான உடல் நலம் மற்றும் மன நலத்தோடு சிறந்த சமுதாயத்தை உருவாக்க விளையாட்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
அதற்கு முன்னுதாரணமாக, பிரேசிலில் போதை பழக்கவழக்கங்களும், போதை பொருள் கலாச்சாரமும் அதிகமாக இருந்தது. ஆனால் அன்றைக்கு இருந்த பிரேசில் அரசு விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து முன்னிலைப்படுத்தினார்கள். இதனை தொடர்ந்து அந்நாட்டு இளைஞர்கள் தங்களுடைய நேரத்தையும், உழைப்பையும் விளையாட்டுத்துறையில் அதிகமாக கவனம் செலுத்தினார்கள். இதன் விளைவாக பிரேசிலை கால்பந்து விளையாட்டில் உலகின் சிறந்த நாடாக மாற்றியமைத்தது.
தமிழ்நாட்டை வளர்ந்த, பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலம் என்று சொல்லி கொண்டிருக்கிறோம். ஆனால் குழு விளையாட்டை தவிர, தனி விளையாட்டுகளில் இதுவரை நாம் பதக்கம் ஏதும் வென்றதில்லை. இத்தகைய சூழ்நிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாடு பதக்கங்களை பெரும் வகையில் தேவையான செயல்திட்டங்களை உருவாக்க நடவடிக்க மேற்கொள்ளபடும்.
தமிழ்நாட்டில் போதை பொருள் பழக்கத்தினை முற்றிலுமாக ஒழிப்பதற்கு முதல்-அமைச்சர் அவர்கள் பல்வேறு செயல்திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள். அதில் ஒரு பகுதியாக மேல் குறிப்பிடப்பட்டதன் அடிப்படையில் விளையாட்டு துறையை ஊக்கப்படுத்துவதும் மிக முக்கிய ஒன்றாக அமைத்துள்ளது. குறிப்பாக பள்ளி பருவத்திலிருந்தே நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்கள் என அனைத்து நிலைகளிலும் விளையாட்டிற்கு முக்கியதுவம் அளித்து இத்தகைய செயல்திட்டங்களில் கவனம் செலுத்தும்போது, போதை கலாச்சாரம் ஒழிக்கப்படுவதற்கு சாத்தியம் அதிகமாக இருக்கும். அதற்க்கான பணிகளை நாங்கள் தற்பொழுது துவங்கியுள்ளோம்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விளையாட்டு துறைக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக நேரு உள்விளையாட்டு அரங்கில் ரூ.3.49 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படவுள்ள கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளுக்கான பன்னோக்கு உள்விளையாட்டு அரங்கத்திற்கான கட்டுமான பணிகள், நீச்சல் பயிற்சி மையம், பாரா பாட்மிண்டன் அரங்கம், ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி மையம், சென்னை ஒலிம்பிக் அகாடமி மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்கள். இதனை தொடர்ந்து, மாணவியர் விளையாட்டு விடுதியில் வழங்கப்படும் காலை உணவுகள் குறித்து ஆய்வு செய்து, வீராங்கனைகளுடன் உணவருந்தினார்கள்.
இந்த ஆய்வின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் திரு. சத்யபிரத சாகு, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு. ரா. சுமன், பொது மேலாளர் எல். சுஜாதா, துணை பொது மேலாளர் நோயளின் ஜான், நிர்வாக பொறியாளர் புஷ்பலிங்கம் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.