

திருப்பூர்,
திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த தேவராயம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று இங்கு, 5-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒரு புள்ளி மானை சூழ்ந்து கடித்துக் குதறிக்கொண்டிருந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டியடித்து, காயமடைந்த புள்ளிமானை மீட்டனர். ஆனாலும் சிறிது நேரத்தில் அந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், உயிரிழந்த மானின் உடலை மீட்டனர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் மூலம் மானின் உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டது.
தற்போது கோடை வெயில் கொளுத்துவதால், கோதைபாளையம் பகுதியில் இருந்து தண்ணீரை தேடி மான் வந்து இருக்கலாம். அப்போது தெருநாய்கள் மானை துரத்தி சென்று கடித்து கொன்று இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். எனவே கோதைபாளையம் பகுதிகளில் தொட்டி அமைத்து, அதில் தண்ணீர் நிரப்பினால் மான்கள் உள்ளிட்ட விலங்குகள் தாகம் தீர்த்துக்கொள்ளும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.