

சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
திமுக ஒட்டுமொத்தமாக பொய்யும், புரட்டையுமே தங்களது அரசியல் வழியாக காலந்தோறும் செய்துவருகிறது. அதன் நீட்சியை இப்போது திமுகவின் ஐடி-விங்கும் துவக்கியுள்ளது. தரம் தாழ்ந்த அரசியல் விமர்சனங்களையும், உண்மைக்கு மாறான தகவல்களையும் பொதுவெளியில் பரப்பி வருவது திமுகவின் ஐடி விங்கிற்கு வாடிக்கையாகிவிட்டது.
அந்த வகையில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டை, அவதூறு செய்திகளை தற்போது பரப்பி, தாங்கள் அரசியல் நாகரீகம் அற்றவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிருபணம் செய்து வருகிறார்கள்.
அரசியலில் நேருக்கு நேர் எதிர்கொள்ள துணிவில்லாமல் தேர்தல் தோல்வியால், பித்துப் பிடித்த மனநிலையில் உள்ள திமுக தலைமை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை குறிவைத்து உண்மைக்கு மாறான வதந்திகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். திமுகவின் இதுபோன்ற அவதூறுகள் மற்றும் பொய்யுரைகளை கண்டுதான் மக்கள் அவர்களுக்கு தேர்தலில் தக்க பாடத்தை கொடுத்தார்கள்.
தற்போது அமலாக்கத்துறை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள குறிப்பிட்ட நபருக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் துளி அளவும் தொடர்பு இல்லை. தைரியம் இருந்தால் அதை சட்டரீதியாக திமுக ஐடி விங் நிரூபிக்கட்டும். ஐந்து வருடங்களாக திமுக ஆட்சியிலிருந்தபோது போதை கலாசாரத்தை ஊக்குவித்து, தமிழகத்தை நாசகரம் செய்தததை மக்கள் மறக்கவில்லை. இன்று அதை ஒழிக்கவும், அடுத்த தலைமுறையை நல்வழிப்படுத்தி போதை கலாசாரத்தை முற்றிலும் தமிழகத்திலிருந்து அகற்றுவதற்கான பெரும் போராட்டத்தை எல்லா வகையிலும் இந்த அரசு செய்து வருகிறது.
திமுகவின் பொய்களுக்கும், வதந்திகளுக்கும் நாகரீகமற்ற குற்றசாட்டுகளுக்கும் விரைவில் சட்டரீதியாக நாங்கள் பதிலடி கொடுப்போம். அமைச்சர் மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டை முன்வைத்து தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட திமுக ஐடி விங்கை சட்ட ரீதியாக எதிர் கொள்வோம்… அபாண்ட பொய்களையும், அவதூறு செய்திகளையும் பரப்பியே பழக்கப்பட்ட திமுக ஐடி விங்கின் முகமூடியை மக்கள் முன் உண்மைப்படுத்துவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.