

சென்னை,
மத்திய அரசை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஏதாவது வாயை திறக்கிறாரா? வழக்குகளை காட்டி மிரட்டி பிரதமர் மோடி, எடப்பாடியை பணிய வைத்துள்ளார் என்று போகிற போக்கில் சேற்றை வாரிப்பூசும் வேலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார். தி.மு.க. அமைச்சர்கள் உள்பட பலர் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றத்தில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன.
இலாக்கா இல்லாத அமைச்சராகவே ஒரு நபர் ஜெயிலில் இருக்கிறார். அமலாக்கத்துறை வழக்குகள் மற்றும் ரெய்டுகள் பல தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது உள்ளது. மேலும், இவர்கள் மாநிலத்தில் ஆளும் கட்சியாகவும், அதே சமயத்தில், மத்தியில் காங்கிரஸ் கூட்டணியிலும் பங்கு பெற்றிருந்த போதே, இவர்கள் மீது சி.பி.ஐ வழக்குகள் இருந்ததை தி.மு.க. தலைவர் வசதியாக மறந்துவிட்டார் போலும்.
வழக்குகளை மறைக்க...
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும் தி.மு.க. அரசால் புனையப்பட்ட, ஜோடிக்கப்பட்ட வழக்குகள்தான் உள்ளனவே தவிர, மத்திய அமலாக்கத்துறை வழக்குகள் ஏதும் இல்லை. வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பணப்பரிமாற்றம் பற்றி விசாரிக்கும் அமலாக்கத் துறையின் வழக்குகளை மறைக்க, எந்தவித அடிப்படை ஆதாரமின்றி எங்களைப் பற்றி அவதூறாக கூறியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு வரும் காலத்தில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
மேலும், மணிப்பூர் சம்பவம் குறித்து நான் ஏதும் பேசவில்லை என்று முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மணிப்பூர் கலவரம் தொடங்கிய உடனேயே அதனைக்கண்டித்தும், கலவரத்தைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும், அங்குள்ள தமிழர்களை பாதுகாப்பாகக் காப்பாற்றவேண்டும் என்றும் அ.தி.மு.க. சார்பில் 8.5.2023 நாளிட்ட அறிக்கை மூலம் முதல்-அமைச்சருடைய கவனத்தை ஈர்த்திருந்தேன். கண்டன அறிக்கையும் வெளியிட்டு இருந்தேன்.
பாலியல் குற்றங்கள்
தமிழகத்தில் 2019-ம் ஆண்டு எனது தலைமையிலான ஆட்சியில், பாலியல் வன்கொடுமை குற்றங்கள் - 7. ஆனால், தி.மு.க. அரசின் 2022-ம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பின்படி நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை குற்றங்கள் - 58. இதில் இருந்தே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.