இலங்கை குண்டுவெடிப்பு; நேரில் கண்ட தி.மு.க. நிர்வாகியின் திக் திக் அனுபவங்கள்

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலை நேரில் கண்ட தி.மு.க. நிர்வாகி தனது திக் திக் அனுபவங்களை தெரிவித்து உள்ளார். #SriLankablasts
இலங்கை குண்டுவெடிப்பு; நேரில் கண்ட தி.மு.க. நிர்வாகியின் திக் திக் அனுபவங்கள்
Published on

சென்னை,

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் 2 தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர். 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தபொழுது திருப்பூர் தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராஜ் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் இருந்துள்ளார். குண்டுவெடிப்பு தாக்குதலை நேரில் கண்டபொழுது அந்த நிமிடங்கள் திக் திக் என இருந்தது தனது அனுபவத்தினை தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின் நாடு திரும்பிய அவர் தனக்கு நேர்ந்தவற்றை பற்றி கட்சி தொண்டர்களிடம் கூறினார். இதனை கேட்ட தி.மு.க. தொண்டர்கள் அழுதனர். அவர்களில் சிலர் அவரை கட்டி பிடித்து கொண்டு கதறியழுதனர்.

இதுபற்றி தி.மு.க. நிர்வாகி செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, குண்டுவெடிப்பு நடந்தபொழுது ஓட்டலில் இருந்தோம். திடீரென மிகப்பெரிய வெடி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தோம். பல இடங்களில் குண்டுவெடித்துள்ளது கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து உடனே ஓட்டலின் கீழே சென்றோம். அப்பொழுது அங்கு நடந்த விபரீதம் எங்களுக்கு புரிந்தது.

இதனால் திரும்பி ஊருக்கு செல்வோமா, இல்லையா என்ற அச்சம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து மிகவும் ஆறுதலாக பேசினார்.

நாங்கள் திரும்பி ஊர் வந்து சேர்ந்தபின்பே நிம்மதியாக இருந்தது. இதுபோன்று சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். வாழ்க்கையில் முதன்முறையாக வெளிநாடு சென்றிருந்தேன். இதுபோன்ற சம்பவம் யாருக்கும் நடக்க கூடாது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com