

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 5:05 மணிக்கு அந்தமானுக்கு சென்ற விமானம் மீண்டும் காலை 10.20 மணிக்கு சென்னை திரும்பி வரவேண்டும். பின்னர் சென்னையில் இருந்து பகல் 12 மணிக்கு கொழும்புக்கு பன்னாட்டு விமானமாக புறப்பட்டு செல்ல வேண்டும். ஆனால் அந்தமானுக்கு சென்ற விமானத்தில் திடீரென எந்திரகோளாறு ஏற்பட்டது. இதனால் அந்தமானில் இருந்து அந்த விமானம் சென்னைக்கு புறப்பட முடியாமல் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்தமானில் இருந்து சென்னைக்கு வர இருந்த 148 பயணிகளும் அங்கு தவித்தனர்.
இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய விமானத்தில் பயணம் செய்ய 156 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் அந்தமானில் எந்திர கோளாறு ஏற்பட்ட விமானம் வராததால் இலங்கை செல்லும் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இலங்கை செல்ல வேண்டிய 156 பயணிகள் விமான நிலையத்தில் பல மணி நேரமாக தவித்துக்கொண்டு இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். இதையடுத்து மாற்று விமானம் ஏற்பாடு செய்து மாலை 6.30 மணிக்கு இலங்கைக்கு விமானம் புறப்பட்டு சென்றது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சுமார் 6 மணிநேரம் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.