ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

கோப்புப்படம்
10 ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றது.
சென்னை,
தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.
இந்நிலையில் நெடுந்தீவு பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 10 ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகை, இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றதாகவும், யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது அவர்களது குடும்பத்தினரையும், மீனவ மக்களையும் மிகுந்த சோகம் அடைய செய்துள்ளது. இலங்கை கடற்படை அத்துமீறி நடவடிக்கை எடுத்து மீனவர்களை கைது செய்து இருப்பதாகவும், எனவே அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






