தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்: நிரந்தர தீர்வுகாண எஸ்டிபிஐ வலியுறுத்தல்

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 30 பேர் நேற்று கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்டக்கோரி மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு நிரந்தர தீர்வுகாண எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழகத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் இலங்கை கடற்படையால் அத்துமீறி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 4 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டில் ஒரே நாளில் இவ்வளவு மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும். இது தமிழக மீனவ சமூகத்தினரிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி, இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை விரட்டியடிப்பது, கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது, மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவது போன்ற அத்துமீறல்களை தொடர்ந்து செய்து வருகிறது. இதனால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, 74 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர், மேலும் 242 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு இலங்கை கடற்படையின் இத்தகைய நடவடிக்கைகளை தடுக்கத் தவறியதும், தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதில் மெத்தனப் போக்கு கடைப்பிடிப்பதும் இப்பிரச்சினைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதனால், மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
ஆகவே, மத்திய அரசு இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, தமிழக மீனவர்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






