

கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் நிர்வாக தலைவராக இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டம் முருங்கன் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்கிற கண்ணா (வயது 42) பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு தேவிகா (38) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
முகாம் தலைவரான சிவகுமாருக்கும், அதே முகாமை சேர்ந்த செல்வா மற்றும் அவரது சகோதரர் கண்ணா என்பவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு முகாமில் சிவகுமாரை வழிமறித்து ஓட, ஓட அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் செல்வா மற்றும் கண்ணா தரப்பினர் சிலர் ஒன்றாக சேர்ந்து வெட்டியதாக தெரிகிறது. முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் சுய நினைவின்றி கிடந்த சிவகுமாரை, இலங்கை தமிழர்கள் சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவகுமார் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
இந்த கொலை சம்பவம் முகாம் முழுவதும் காட்டு தீயாக பரவிய நிலையில், 200-க்கும் மேற்பட்ட முகாம் தமிழர்கள் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சிவகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் செல்வா மற்றும் கண்ணா ஆகியோரின் வீடுகளை முகாமில் வசிக்கும் சிலர் சேதப்படுத்தி, வீடுகளுக்கு தீ வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பாதுகாப்பு கருதி முகாமில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கைத்தமிழர் கொலை வழக்கு தொடர்பாக தீபக் ஆகாஷ், புஷ்பா, நிஷா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.