

சென்னை,
ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்த ஒரு கடுமையான வாக்குவாதத்தில் பெண் ஒருவர் அவரது 4-வது கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே மதப்பாக்கத்தில் உள்ள காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சனி (வயது 34). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சத்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உண்டு. பின்னர், தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்தத் தம்பதியினர் விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு ரஞ்சனி அசைன் என்பரைத் திருமணம் செய்தார். அசைன் 5 வருடங்களுக்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து இறந்துவிட்டார். பின்னர் ரஞ்சனி அசார் என்பவருடன் சிறிது காலம் வாழ்ந்து, பிறகு பிரிந்துவிட்டார்.
அதன்பின் ரஞ்சனி நான்காவதாக செந்தில் என்பவரைத் திருமணம் செய்தார். சமீப ஆண்டுகளாக ரஞ்சனி, தனது 4-வது கணவரான செந்திலுடன் ஸ்ரீபெரும்புதூர் அருகே திருத்தவெளி கிராமத்தில் உள்ள மண்டவெளித் தெருவில் வசித்து வந்தார்.
கணவன்- மனைவி இருவரும் கடந்த புதன்கிழமை இரவு அதிக போதைமிக்க மதுவை அருந்தினர். இதனைத் தொடர்ந்து போதையில் இவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சற்று நேரத்தில் சண்டை முற்றிய நிலையில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. ஆத்திரம் அடைந்த செந்தில் ரஞ்சனியை கொடூரமாகத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ரஞ்சனி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மது போதையில் இருந்த செந்தில், மனைவி இறந்ததுகூட தெரியாமல் இருந்தார். மறுநாள் காலையில் மனைவி இறந்ததை அறிந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினார். காலையில் ரஞ்சனி வீட்டிற்குள் இறந்து கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் படப்பை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செந்தில் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.