ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆய்வு

சிலைகள் மாயமான வழக்கு தொடர்பாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆய்வு நடத்தினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆய்வு
Published on

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜ நரசிம்மன் பிப்ரவரி மாதம் ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், கோவிலில் நூற்றுக்கணக்கான சிலைகள் மாயமாகி இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், ஸ்ரீரங்கம் கோவிலில் ஆய்வு நடத்தி, 6 வார காலத்துக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த மாதம் 10-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மற்றும் போலீசார் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நேற்று வந்து ஆய்வு செய்தனர். அப்போது புகார் கொடுத்த ரெங்கராஜ நரசிம்மன் உடன் சென்றார். அவர் கோவிலில் எங்கெல்லாம் வைக்கப்பட்டு இருந்த சிலைகள் மாயமாகி உள்ளது என்பது பற்றி விளக்கி கூறினார். இதற்கு கோவில் இணைஆணையர் ஜெயராமன் விளக்கம் அளித்தார். இந்த காட்சிகள் அனைத்தையும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். சுமார் 3 மணி நேரம் இந்த ஆய்வு நடந்தது.

அதன்பிறகு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நிருபர்களிடம் கூறுகையில், ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆய்வுப்பணிகளை தொடங்கி இருக்கிறோம். 25 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. 100 சதவீத ஆய்வையும் முடித்த பிறகு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்வோம் என்றார்.

இதையடுத்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கூறும்போது, பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கவோ அல்லது புகார் கொடுக்க விரும்பினாலோ திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு முகாம் அலுவலகத்துக்கு வந்து கொடுக்கலாம். இது தொடர்பாக தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com