ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா - தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

ராப்பத்து உற்சத்தின் 8-ம் நாளான இன்று திருமங்கை மன்னன் வேடுபறி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா - தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்
Published on

ஸ்ரீரங்கம்,

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும் விளங்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

மறுநாளான 4-ந்தேதியில் இருந்து பகல்பத்து உற்சவம் தொடங்கியது. இதனையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் காலை வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வந்தார். வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கடந்த 14 ஆம் தேதி அதிகாலை திறக்கப்பட்டது.

பரமபதவாசல் திறப்பு நாளில் இருந்து உற்சவத்தின் இரண்டாம் பகுதியான ராப்பத்து திருவாய் மொழித் திருநாள் தொடங்கியது. ராப்பத்து உற்சவத்தின் போது நம்பெருமாள் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபத வாசல் வழியாக திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

அந்த வகையில் ராப்பத்து உற்சத்தின் 8-ம் நாளான இன்று திருமங்கை மன்னன் வேடுபறி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. வேடுபறி நிகழ்ச்சியின் போது மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வையாளி வகையறா கண்டு அருளினார்.

பின்னர் இரவு 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைந்த நம்பெருமாள், அங்கு இரவு 8.15 மணிமுதல் இரவு 9.30 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜனசேவைக்காக எழுந்தருளுகிறார். இதையடுத்து இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com