

ஏரல்,
ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் கண்மாயில் நேற்று சிலர் 3 பொக்லைன் எந்திரம் மூலமாக கரம்பை மண்ணை அள்ளி ஒரு டிராக்டரில் ஏற்றி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் உதவி கலெக்டர் கௌதம், ஏரல் தாசில்தார் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் முத்துமாரி, கிராம நிர்வாக அதிகாரி காளிராஜ் மற்றும் வருவாய்துறையினர் அந்த கண்மாய்க்கு சென்று, கரம்பை மண் ஏற்றி சென்ற டிராக்டரை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். மேலும், கண்மாயில் இருந்த 3 பொக்லைன் எந்திரங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை ஏரல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அன்னை வி.ஜி. சரவணன் எம்.எல்.ஏ. அந்த கண்மாய்க்கு சென்றார். அங்கு இருந்த உதவி கலெக்டரிடம், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கண்மாய் தூர் வாரப்படாமல் உள்ளது. இதனால் இங்கு அதிக அளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியாததால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. அதிகாரிகள் தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விவசாயிகளே தூர்வாரி அந்த மண்ணை நிலத்தில் கொண்டு பயன்படுத்த எடுத்து செல்கிறார்கள். விவசாயிகள் தங்கள் தேவைக்காக மண் எடுக்க ஏன் நீங்கள் தடை விதிக்கிறீர்கள்? என்றவாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதற்கு பதிலளித்த உதவி கலெக்டர், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கண்மாய்களுக்கும், கரைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் நீர்வளத்துறை மண் அள்ள தடை விதித்துள்ளது. அந்த உத்தரவை மீறி மண் அள்ளியதால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கனிம வளங்களை எடுப்பதற்கு சட்ட விதிமுறைகள் உள்ளதால் அவற்றை பின்பற்றியே அனுமதி வழங்க முடியும், என்றார். இதை தொடர்ந்து அதிகாரிகளுக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அதிகாரிகள் காரில் ஏறி புறப்பட்டனர். அந்த காரை அங்கிருந்த விவசாயிகள் முற்றுகையிட்டனர். அவர்களை ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம்அலி, சப்- இன்ஸ்பெக்டர் கபில்தேவ் மற்றும் போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.மேலும், கண்மாயில் கரம்பைமண் அள்ளியது குறித்து தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.