ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுர திருப்பணிகள் மும்முரம்

திருப்பணிகள் முடிய சுமார் 18 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுர திருப்பணிகள் மும்முரம்
Published on: 

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுர திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

ஆண்டாள் கோவில்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கோபுரம் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கி வருகிறது. ஆண்டாள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது முதல் கட்டமாக பெரிய பெருமாள் என அழைக்கப்படும் வடபத்திர சயனார் கோவில், மூலஸ்தான கோபுரம், ராஜகோபுரம், சக்கரத்தாழ்வார் மூலஸ்தான கோபுரம், பெரியாழ்வார் சன்னதி, மூலஸ்தான கோபுரங்களுக்கு திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டன.

திருப்பணிகள் தொடக்கம்

இதற்காக கோபுரத்தில் சாரம் அமைக்கும் பணி நடந்தது. தற்போது திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக ஒன்றரை கோடி ரூபாயில் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் முடிய சுமார் 18 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. பணிகள் நிறைவடைந்தவுடன் முதல் கட்டமாக பெரிய பெருமாள், சக்கரத்தாழ்வார், பெரிய ஆழ்வார், ராஜ கோபுரத்திற்கான கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கோபுரங்களுக்கு லேசர் ஒளியை கொண்டு ராட்சத விளக்குகள் அமைக்கப்பட்டன. இதற்காக முந்தைய அரசு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து அந்த பணிகள் முடிந்தன.

மின்னொளி

தற்போது ஆண்டாள் கோவில் முகப்பு கோபுரம், மூலஸ்தான தங்க விமானம் ஆகியவற்றில் லேசர் விளக்குகள் அமைக்கப்பட்டு இரவு நேரத்தில் மின்னொளியில் மிளிர்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஆண்டாள் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

X