எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு; 100 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் 100 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு; 100 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி
Published on

சென்னை,

பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் 100 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 13-ந்தேதி நிறைவடைவதாக இருந்தது. ஆனால் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால், தேர்வு தொடங்காமலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர், ஜூன் மாதம் 1-ந்தேதி தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை அறிவித்தது. அந்த தேர்வும் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, ஜூன் 15-ந்தேதி தேர்வு தொடங்குவதாக இருந்தது. ஆனால் நோயின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் மாணவர்களின் நலன்கருதி, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுத இருந்த மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. உயர்கல்விக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய மேல்நிலை கல்வியில் பாடப்பிரிவை தேர்வுசெய்வதற்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மதிப்பெண் முக்கியமாக இருக்கிறது.

அந்த வகையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மதிப்பெண் என்பது பள்ளி அளவில் நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும் என 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அரசு கூறி இருந்தது.

அதன் அடிப்படையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொண்டனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 12 ஆயிரத்து 690 மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 68 ஆயிரத்து 70 மாணவிகளும், 4 லட்சத்து 71 ஆயிரத்து759 மாணவர்களும் என மொத்தம் 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணவ - மாணவிகள் தேர்வு எழுத பதிவு செய்து இருந்தனர். அவர்கள் அனைவரும் (100 சதவீதம்) தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 6 ஆயிரத்து 235 மாற்றுத்திறனாளி மாணவர்களும் அடங்குவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவு வெளியிட்டதும், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு இருப்பதால், மறுகூட்டல் வாய்ப்புக்கு பதிலாக மதிப்பெண் சார்ந்த குறைகள் இருந்தால் அதனை தெரிவிக்க குறை தீர்க்கும் படிவத்தினை பள்ளிகள் வாயிலாக பூர்த்திசெய்து அனுப்ப அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாணவ-மாணவிகள் தங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் மதிப்பெண்ணில் எதுவும் குறைகள் இருந்தால், வருகிற 17-ந்தேதி முதல் 25-ந்தேதிக்குள் அவரவர் பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியர் வழியாக குறைதீர்க்கும் படிவத்தினை பூர்த்திசெய்து கொடுக்கவேண்டும். மாணவர்களின் கோரிக்கை முறையாக பரிசீலிக்கப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக முடிவுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட இருக்கிறது.

மேலும், மாணவ-மாணவிகளின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மூலமாக வருகிற 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது. இந்த தேதிகளில் மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்தநிலையில், அதன்மூலம் எவ்வளவு மதிப்பெண் வரும்? என்று ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் மனக்கணக்கு போட்டு இருந்தனர். பொதுத்தேர்வு எழுதி, அதன்மூலம் வரும் மதிப்பெண்களைவிட இது குறைவாகத்தான் இருக்கும் என்று பெற்றோரும் கூறிவந்தனர்.

ஆனால் தற்போது மாணவ-மாணவிகளின் மனக்கணக்கில் போட்ட மதிப்பெண்களைவிட மிக குறைவான மதிப்பெண்கள்தான் தேர்வுத்துறை வழங்கி இருப்பதாக சில மாணவ-மாணவிகள் குமுறுகின்றனர். இதன் அடிப்படையில் பார்க்கும்போது, குறைதீர்க்கும் படிவம் மூலம் மாணவர்கள் பலர் தங்கள் குறைகளை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com