எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எப்போது? - கல்வித்துறை தகவல்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எப்போது? - கல்வித்துறை தகவல்
Published on

சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 27-ந்தேதி தொடங்க இருந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுத இருந்தனர்.

ஆனால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அது தள்ளிவைக்கப்படுகிறது என்றும், ஏப்ரல் 15-ந்தேதி அன்று மீண்டும் தேர்வு தொடங்கும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்ட சபையில் அறிவித்தார்.

இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சி தலைவர்களும், ஆசிரியர் சங்கங்களும் முன்வைத்தன.

மாணவர்களும், பெற்றோரும் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற குழப்பத்தில் தவித்து வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு இல்லை என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்த நிலையில், ஊரடங்கு வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இதனால் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எப்போது நடக்கும்? என்பது தொடர்ந்து கேள்விக்குறியானது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரியிடம் கேட்டதற்கு, தேர்வு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. ரத்து செய்யப்படவில்லை. ஊரடங்கு முடிந்ததும் பொதுத்தேர்வு எப்போது நடக்கும்? என்பது குறித்த அறிவிப்பும், தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com