எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியீடு - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

ரத்து செய்யப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவித்து இருக்கிறது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியீடு - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
Published on

சென்னை,

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அப்போது நடைபெற இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 2 முறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்வை 9 லட்சத்து 45 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகளும், சுமார் 10 ஆயிரம் தனித்தேர்வர்களும் என மொத்தம் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாண வர்கள் எழுத இருந்தனர்.

இந்தநிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும் என 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு தேர்வு முடிவு வெளியிடப்படும் என அரசு அறிவித்தது.

அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு 10-ந்தேதி (நாளை மறுதினம்) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.inஎன்ற இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிபடிவத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்) அனுப்பப்படும்.

இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவு வெளியிடப்படுவதால் வழக்கமாக வழங்கப்படும் மறுகூட்டல் வாய்ப்புக்கு பதிலாக மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் சார்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின், வருகிற 17-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையில் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாக குறைதீர்க்கும் படிவத்தை பூர்த்திசெய்து தலைமை ஆசிரியர்கள் வாயிலாக அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமைஆசிரியர் வாயிலாக முடிவுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தலைமை ஆசிரியர் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டபோது பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து அறிவிக்கப்பட்டது. அப்போது தனித்தேர்வர்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல், தற்போது தேர்வு முடிவு அறிவிப்பிலும் தனித்தேர்வர்களுக்கு எந்த அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com