

சென்னை:
கோவில் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் நேரடி நியமனம் வாயிலாக வெளிப்படையாக பணி நியமனம் செய்ய திருக்கோவில் தேர்வு பணியாளர் தேர்வு வாரியம் இந்தாண்டு அமைக்கப்படும் என சட்டசபையில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் சட்டசபையில் பேசியதாவது:-
திருக்கோவில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நேரடி நியமனக் காலிப்பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடன் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய புதிய பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு இவ்வாண்டு மொத்தம் 10,000 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் மண்டல இணை ஆணையர் அலுவலகம் வாரியாக அந்தந்தப் பகுதியில் உள்ள முக்கிய கோவில்களுக்கு ஒரு நாள் ஆன்மிகப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவில்களில் பழமையும், பெருமையும் மிக்க திருக்கோவில்களின் வரலாற்றுச் சிறப்பையும், கல்வெட்டு, கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை முதலான சிறப்புகளை ஆர்வலர்கள் அறிந்து கொள்ளும் வகையில் முதற்கட்டமாக 2,000 பக்தர்கள் பயன்பெறும் வகையில் வெற்றி கலை அறிவுசார் திருக்கோயில் பயணம் ஏற்பாடு செய்யப்படும்.
"ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்ற தத்துவத்தை உணர்த்திய சித்தர்களின் தமிழர் மெய்யியல், மருத்துவம் மற்றும் அறிவியல் பங்களிப்புகளைப் போற்றும் வகையில், அவர்களின் மாதம், நட்சத்திரம் மற்றும் திருத்தலங்களை அடிப்படையாகக் கொண்டு ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு விழாக்கள் நடத்தப்படும்.
நாகப்பட்டினம் திருப்புகலூர் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று தேவரா பாடலின் மெய்ப்பொருளை மக்கள் அறியும் வண்ணம் சொற்பொழிவுகள், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி திருநாவுக்கரசரின் தமிழும் சைவமும் போற்றப்படும் வகையில் சிறப்பு விழாவாக நடத்தப்படும்.
கிராமப்புறங்களின் தொன்மையான பெண் மற்றும் காவல் தெய்வ வழிபாட்டு மரபுகள் மற்றும் கலைப் பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து மண்டலங்களிலும் ஆண்டுதோறும் கூத்து, நாடகம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் 'கிராம தெய்வக் கலைவிழா' நடத்தப்படும்.
முருகப்பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடு திருக்கோவில்களை முன்மாதிரித் திருக்கோவில்களாக மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
*பழனி கோவில் கல்வி நிறுவனங்களுக்கு 3.10கோடி ரூபாயில் 9 புதிய பஸ்கள் வாங்கப்படும்.
* காமராஜர் பிறந்த நாளில் கோவில்களில் பொது விருந்து ஏற்பாடு செய்யப்படும்.
* மருதமலை, அழகர்கோவில்களுக்கு சொந்தமான பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் செய்யப்படும்.
*மருதமலை கோவில் பள்ளியில் 90 லட்சம் ரூபாயில் கலையரங்கம் சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை.
*அழகர் சுந்தர்ராசா மேல்நிலை பள்ளியில் 87 லட்சம் ரூபாயில் குடிநீர் உள்ளிட்டவசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.
*திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டப்படும்.
மீனாட்சி அம்மன் கோவில் கருணை இல்லத்தில் கூடுதல் அறை நவீன சமையல் கூடம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டார்.