மருதமலை கோவிலில் ரூ.10 கோடியில் படிக்கட்டுகள் புனரமைப்பு!

கோவிலுக்கு பின்புறத்தில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
மருதமலை கோவிலில் ரூ.10 கோடியில் படிக்கட்டுகள் புனரமைப்பு!
Published on

கோவை,

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில் ரூ.10 கோடியில் படிக்கட்டுகளை புனரமைக்கும் பணி நடைபெறுகிறது.

7-வது படை வீடு

கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இது முருகப்பெருமானின் 7-வது படைவீடு என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் லிப்ட், தங்கும் மண்டபம் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

மலை மேல் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க அடி வாரத்தில் இருந்து படிக்கட்டு பாதை மற்றும் வாகனங்கள் செல்லும் வகையில் மலைப்பாதை உள்ளது. இதில், மலைக்கு மேல் உள்ள வாகன நிறுத்தம் வரை செல்ல முடியும். ஆனால் வாரவிடுமுறை. முக்கிய பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அப்போது கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் மலைப்பாதையில் அனுமதிக்கப்படுவது இல்லை.இதனால் பக்தர்கள் கோவில் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் மூலம் மலைக்கு மேல் செல்கின்றனர். ஆனாலும் பலர் படிக்கட்டு பாதை வழியாக கோவிலுக்கு செல்கின்றனர்.

புனரமைக்கும் பணி

ஆனால் இந்த படிக்கட்டுகள் செங்குத்தாக உள்ளது. இதனால் வயதானவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே பழனி கோவிலில் யானைப்பாதையில் உள்ளது போன்று பக்தர்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில் படிக்கட்டுகளை மாற்றி அமைக்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டது. அதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.இதுதவிர கோவிலுக்கு பின்புறத்தில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com