அரசு பணத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடுவதா? தடுத்து நிறுத்த கவர்னருக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை

அரசு பணத்தில் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் கொண்டாடப்படுவதை கவர்னர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரசு பணத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடுவதா? தடுத்து நிறுத்த கவர்னருக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை
Published on

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதா பிறந்தநாள்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஒன்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்ததற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீதான இளைய சமுதாயத்தின் நம்பிக்கையை சீர்குலைக்கும் விதத்தில் இது அமைந்துள்ளது. பொதுவாழ்வில் தூய்மை என்ற கோட்பாடே அ.தி.மு.க. ஆட்சியில் எள்ளி நகையாடப்படும் நிலைக்கு வந்து விட்டது என்பது உள்ளபடியே வேதனையளிக்கிறது. அதைவிட, இந்த மரம் நடும் விழாவிற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளரும், தலைமைச் செயலாளரும் இணைந்து முழுப்பக்க விளம்பரம் கொடுத்திருப்பது, நிர்வாகத்தில் நேர்மை, தூய்மை போன்ற விஷயங்களை எல்லாம் இந்த குற்றவாளி சசிகலாவின் பினாமி அரசில் தங்களாலும் நிலைநாட்ட முடியாது என அவர்கள் ஒப்புக்கொள்வதாகவே அமைந்துள்ளது.

தடுத்து நிறுத்த வேண்டும்

ஆகவே, அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு முற்றிலும் முரணான வகையில், மரம் நடும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த மரம் நடும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய நிதித்துறை செயலாளர், இதற்காக விளம்பரம் கொடுத்த சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலத்தின் பொறுப்பு கவர்னரை கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் சட்டப்படி ஆட்சி செலுத்துகிறோம் என்று பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணத்தை கவர்னர் முன்பு எடுத்துக்கொண்டு விட்டு, இன்றைக்கு உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் விழா கொண்டாட்டங்களை, அதுவும் அரசு பணத்தில் நடத்தப்படுவதை தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com