நடிகர் விஜய் உத்தரவுப்படி நகர்ப்புற தேர்தலில் தனித்து போட்டி

நடிகர் விஜய் உத்தரவுப்படி விஜய் மக்கள் இயக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் வெற்றிக்கு முழுமூச்சுடன் பிரசாரம் செய்யுங்கள் என்று ரசிகர்களுக்கு நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் விஜய் உத்தரவுப்படி நகர்ப்புற தேர்தலில் தனித்து போட்டி
Published on

சென்னை,

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம், ஊரக உள்ளாட்சி தேர்தலை போன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் களம் இறங்கி உள்ளது. இந்த நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கம், தி.மு.க. கூட்டணியில் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனை விஜய் மக்கள் இயக்கம் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் உத்தரவின்படி விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சியுடனும் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. எனவே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்ட தலைவர்களும், அணி தலைவர்களும், ஒன்றிய, நகர, பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பிரசாரம் செய்ய வேண்டும். விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக செய்த நற்பணிகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விஜய்யின் வியூகம்

சமீப காலமாக நடிகர் விஜய் நடிக்கும் சினிமாக்களில் அரசியல் வசனம் மிகுதியாக இருக்கிறது. எனவே அவர், அரசியலில் காலடி எடுத்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சிக்கு ஆணிவேராக இருப்பது உள்ளாட்சி அமைப்புகள் ஆகும். எனவே விஜய், தனது மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை உள்ளாட்சி தேர்தல் களத்தில் இறக்கி உள்ளார். அதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட்டு 115 இடங்களில் வெற்றி வாகை சூடியது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் விஜய் மக்கள் இயக்கம் தனித்து சந்திக்கிறது.

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி நேரடி தேர்தல் களத்தில் அதிரடியாக நுழைவதற்கான வியூகத்தை விஜய் சத்தம் இல்லாமல் வகுத்து வருவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com